Wednesday, 20 April 2011

அந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா



கோகிலா வீட்டைப் பூட்டிக்கொண்டு படி இறங்கினாள்.
பக்கத்து வீட்டு நீலா மாமி கேட் அருகேயே நின்றிருந்தாள்.
“மாமி அவர் அசந்து தூங்கிண்டிருக்கார்.தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு கதவை வெளிலே பூட்டிண்டு வந்துட்டேன். நான் வர ஒரு மணி நேரம் ஆகும். ஒண்ணு ரெண்டு தரம் ஜன்னல் வழியா எட்டிப் பாருங்கோ. கதவைத் திறந்துண்டு பெட் ரூமுக்குள்ள போயி பாக்க வேண்டாம்.  நான்தான்னு நினைச்சி கையை பிடிச்சி இழுத்துடுவார். அவர் எழுந்தார்ன்னா வீட்டைத் திறந்து விட்டு சாவியை அவரண்ட குடுத்துடுங்கோ. நான் சொன்னேன்னு சொல்லுங்கோ. கோபிச்சிக்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ. முடிஞ்சா காபி போட்டு குடுங்கோ”
மாமி சாவியை வாங்கிக் கொண்டாள்.
கோகிலா போன பிறகுதான் அன்று வியாழக் கிழமை, ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு போக வேண்டும் என்று மாமிக்கு நினைவு வந்தது.
“டேய் கோண்டு, இந்தா இது அடுத்தாத்து சாவி. அந்த மாமி வெளிலே போயிருக்கா. கதவை வெளிலே பூட்டியிருக்கா. உஷா காலேஜ் லேர்ந்து வந்தா அவாத்தை திறந்து சாவியை மாமா கிட்ட தரச்சொல்லிடு. நேர உள்ள போக வேண்டாம்ன்னு சொல்லு. அந்த மாமா கையை புடிச்சி இழுத்துடுவார். கோகிலா கோயிச்சிக்க வேண்டாம்ன்னு சொன்னான்னு சொல்லணும். காபி போட்டு தரணும்.”
மாமி போய் விட்டாள்.
கொஞ்ச நேரம் கழித்து உஷா வந்தாள். கோண்டு சாவியை அவளிடம் கொடுத்து
“அக்கா, அம்மா இந்த சாவியை உன்னண்ட தரச்சொன்னா. கோகிலா மாமி வெளிலே போயிருக்காளாம். அதனாலே கதவைத் திறந்துண்டு உள்ளே போகணுமாம். அந்த மாமா கையை பிடிச்சி இழுப்பாராம்.கோயிச்சிக்க வேண்டாமாம். அவருக்கு காபி போட்டு தரணுமாம்.” என்றான்.
கம்யூனிகேஷன் செய்கிறவரும் கேட்கிறவரும் தெளிவாக இல்லாவிட்டால் என்ன நேரும் என்பதற்காக பயிற்ச்சி வகுப்புகளில் நான் சொல்கிற கதை இது.
மற்றபடி அடுத்த வீட்டு மாமா கையை பிடித்து இழுத்ததாகவும் அவரைத் தான் செவிட்டில் அறைந்ததாகவும் உஷா என்கிற பெயரில் யாராவது சொல்வதைக் கேட்டால் அந்த சம்பவத்தோடு என்னை இணைத்துக்கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment