பெண்களைக் கவர்ந்து வாழ்க்கையில் ஜெயித்துவிட ஆண்கள் ஈடுபடும் வீர தீரச் செயல்களும், அதன்விளைவாக அவர்களின் வாழ்நாளும்/ஆயுட்காலமும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளார் க்ரூகர்! அதாவது, சுமார் 70 நாடுகளின், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்/பாதிக்கும் கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில்,“பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவு வெற்றி இரண்டும்ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது! (பார்ரா…..இது வேறயா?)
ஆனால், பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற/குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஆனால் சராசரியாக ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது! ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் வாழும் கொலம்பியா போன்ற நாடுகள், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள்! காரணம், அந்த ஆண்கள் அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்/காதலுக்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் க்ரூகர்! விளைவு, ஆண்-பெண் இறப்பி விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்! என்ன கொடுமை சார் இது?!
இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா, கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறதாம்?! உதாரணமா, அந்தஸ்த்து சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனவாம்?! விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “ம்ம்ம்….நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள்/பணம் எல்லாம் சம்பாதிக்கனும்” அப்படீன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். அப்புறம் என்ன சும்மாவா இருப்பாங்க, பார்த்ததையெல்லாம் சம்பாதிக்க இரவு பகலா உழைக்கிறது, அது வாங்கனும் இது வாங்கனும்னு மன உளைச்சலை அதிகப்படுத்திக்கிறதுன்னு “ஒரே ரணகளாமாயிடும் வாழ்க்கை”!
ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருவனுக்கு பல பெண்களும்!
“ரெண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டக்காரன்” அப்படீன்னு நம்ம ஊருல சொல்லிக்கேட்டதுண்டு! இப்போதான் தெரியுது அது விஞ்ஞானப்பூர்வமாவும் உண்மைன்னு! ஆமாங்க, பாலிகைனி (polygyny) அப்படீங்கிற ஒருத்தர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஆண்கள் இறப்பு விகிதத்துக்கும் தொடர்பிருக்குதாம். அதாவது, பாலிகைனி வழக்கத்துல ஒரே ஆண் (அந்தஸ்த்தில் உயர்ந்தவன்) பல பெண்களை மணந்து குழந்தைபெறுவதால், அந்தஸ்த்து ஏணியில் கீழே இருக்கும் மீதமுள்ள ஆண்களுக்கு தன் பெண்களை மணந்து தன் சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறதாம்?!
இதுமாதிரியான பாலிகைனி வழக்கத்துனால ஒருத்தருக்கு சமுதாய அந்தஸ்த்து ஏணியில விரைவாக மேலே போகிற வாய்ப்பும், லாபங்கள்/பலன்கள் இருந்தாலும், அதெல்லாம் சும்மா வர்றதில்ல, பல ஆபத்துகள் அப்புறம் சமயத்துல இறப்பு இப்படியான விஷயங்களோடதான் வருதூங்கிறாரு ஆய்வாளர் க்ரூகர்! அது சரி…?!
ஆனா, இது மாதிரியான பாலிகைனி/செக்ஸ் போட்டிகள்ல ஆர்வமில்லாத ஆண்கள் (காரணம் பெரும்பாலும் நல்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது அல்லது வாழ்க்கையில வேறு லட்சியங்களை அடைய முனைவது) பெண்களைக் கவர ஆபத்து நிறைந்த செயல்கள்ல ஈடுபடுறது இல்லைன்னு இன்னபிற ஆய்வுகள் சொல்கின்றனவாம்!
ஆக மொத்தத்துல, இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, “ஒருவனுக்கு ஒருத்தியா (monogamous) சமுதாய/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற நாடுகள்/சமூகத்தில் வாழும் ஒரு ஆணின் வாழ்நாள் செழிப்பாக/மகிழ்ச்சி நிறைந்த இருக்கும்” என்கிறது!
அதனால, “ரதிகளைத் தேடி, அடைந்துவிடவேண்டி ஆபத்துகள்/மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நமக்கு பொருத்தமா ஒரு சங்கீதாவை, சாதனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ எத்தனிக்கிறது எல்லா ஆண்களுக்கும் சாலச்சிறந்தது” அப்படீங்கிறாரு க்ரூகர்!
“காதல்/கல்யாணம் பண்ணா தமன்னா/அசின்/நயன்தாரா மாதிரி ஒரு வெயிட்டான ஃபிகரைத்தான் காதலிக்கனும்/கல்யாணம் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறது உள்ளுணர்வு சார்ந்த ஒரு உந்துதல் என்றாலும் அந்த மாதிரியான உள்ளுணர்வுகள் ஒரு மனிதனோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அப்படீங்கிறதுக்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை” என்பதுதான் இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்து!
ஆக, “ஆண்கள் செக்ஸுக்காக உயிரை கொடுக்கத் தயாராயிருக்காங்க அப்படீங்கிறது அவங்க பரிணாம வளர்ச்சியோட ஒரு அங்கமாவே இருந்துவருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஏன் ஆண்கள் விரைவில் இறந்து போறாங்க” அப்படீங்கிறத ஓரளவுக்கு இந்த ஆய்வு விளக்க முயற்ச்சி பண்ணுது அப்படீங்கிறாரு க்ரூகர்!
இதப் படிச்சதுக்கப்புறம் எனக்கு என்ன தோனுது/புரியுதுன்னா, “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” அப்படீன்னு ஒத்தக் கால்ல நிக்காம, நமக்கு ஏத்தமாதிரி இருக்குற ஒரு தமன்னாவையோ இல்ல அசினையோ , காதலிச்சோ இல்ல பெற்றோர் பார்த்து வச்சோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தியாசந்தோஷமா, இல்லறம் அப்படீங்கிற நல்லறத்தைக் கடைப்பிடிச்சி வாழ முயற்ச்சிக்கிறது புத்திசாலித்தனம்னு தோனுது!
உங்களுக்கும் இப்படியேதான் தோனனும்னு எந்தக் கட்டாயமுமில்லை. அதனால, கண்டிப்பா சில/பல பேருக்கு வேற மாதிரிக்கூட தோனலாம். அப்படித்தோனுறவங்க, முடிஞ்சா ஒரு மறுமொழிய எழுதிட்டுப்போங்க. சரி நான் கெளம்புறேன்!
No comments:
Post a Comment