ஏய்…..ஏய்….நிப்பாட்டு! ஆமா, இப்போ எதுக்கு பாட்டெல்லாம் பாடுற நீ? என்ன சொல்ல வர்ற இப்போ?! அப்படீன்னு கேக்குறீங்களா? சரி, உண்மையச் சொல்லுங்க. இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில, மேலே இருக்குற அந்தத் தத்துவப் (?) பாடல (இல்லைன்னா இது மாதிரியான ஒரு பாட்டை) ஒரு முறைகூட நீங்க உங்களுக்குப் பிடிச்ச/ரசிச்சப் பொண்ணப் பார்த்து பாடவே இல்லைன்னு சொல்லுங்க? கண்டிப்பா பாடியிருப்பீங்க, குறைந்தபட்சம் மனசுக்குள்ளேயாவது பாடியிருப்பீங்க! என்ன ஆமாந்தானே?!
“சரி, பாடியிருப்போம். அதுக்கு என்ன இப்போ” அப்படீன்றீங்களா? அது வேற ஒன்னுமில்லீங்க, நாம ஏன் நமக்கு பிடிச்ச பொண்ணைப் பார்த்தா இந்த மாதிரியெல்லாம் பாட்டு பாடுறது, பல்டி அடிக்கிறது, சைக்கிளை கையை விட்டுட்டு ஓட்டுறது, இப்படி எதாவது வீர தீரச் செயல்கள் ஏதாவது பண்ணி பொண்ணுங்களை கவர முயற்ச்சிக்கிறோம்னு எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு கேள்வி இருந்துச்சி! ஆமா, ஏன் இப்படியெல்லாம் செய்யுறோம்னு சொல்லுங்க?
“ஏய், என்னாதிது…..செந்தில் கவுண்டமணிகிட்ட கேக்குற மாதிரி ஒரு இத்துப்போன கேள்வி” அப்படீன்னு கோபப்படாதீங்க! ஏன்னா, நான் கேட்ட அந்தக் கேள்வியில காரணம் இருக்கு. அதுக்கு மேலோட்டமா பதில் சொன்னீங்கன்னா, “பிடிக்கிற அந்தப் பொண்ணை காதலிச்சு, கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டி பெத்து வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கனும்”னு சொல்லுவீங்க.
ஆனா, அதே கேள்விக்கு உளவியல் பூர்வமான பதில் சொல்ல முயற்ச்சி பண்ணினா எப்படி இருக்கும்? அதுமட்டுமில்லாம, நாம சமயங்கள்ல உயிரை துச்சமா மதிச்சி, நமக்கு பிடிச்ச பொண்ணை அசத்த முயற்ச்சிக்கிறதுனால, நமக்கு ஏற்படும் நன்மை/தீமைகள், லாப/நஷ்டங்கள் என்ன, அது எந்த அளவுக்கு அவசியம்/அனாவசியம் இப்படியான பல கேள்விகள/விஷயங்களத்தான், இனிமே இந்தப் பதிவுல நாம உளவியல் ரீதியா பார்க்கப் போறோம்……
இனப்பெருக்க ரீதியில பார்த்தோம்னா, எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! ஏன்னா, எடுத்துக்கிட்ட அந்த செயலில் வெற்றிடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!
“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபனுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)
ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று! ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)
ஆனால், இதற்க்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்தப் பெண்ணை/அழகான பெண்களை எப்படியாவது கவர்ந்து/ஈர்த்துவிட வேண்டி எதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்! (கீழே இருக்குற படத்துல நீங்க பார்க்கிற மாதிரி?!)
குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடல்வருத்தும்/உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் (அடிமனதிலாவது இருக்கும்!). இங்கே திறமை/பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க என்கிறார் க்ரூகர்!
பரிணாமப்படி பார்த்தால், தன் புகழை/திறமையை நிலைநாட்டவும், பின்பு அதை விளம்பரம்படுத்தவும் , பெரும்பாலும் வன்முறை, வீர தீரச் செயல்கள் மற்றும் பல்வேறு வகையான ஆபத்து நிறைந்த செயல்களையே தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆண்கள் என்பது புலப்படும்! இம்மாதிரியான யுக்திகள், இன்றுவரையிலும் தொடர்கின்றன என்பதற்க்கு தன் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பனமதிப்பையும் காட்டி பெண்களை கவரும்/கவர முயற்ச்சிக்கும் சில/பல இன்றைய ஆண்களே சரியான சான்று!
தொடர்புடைய ஒரு காணொளி…..
No comments:
Post a Comment