Thursday, 31 March 2011

பெண்களை நம்பாதே !

பெண்கள் தங்களது பாவங்களையும், பாகங்களையும் காட்டி உங்களை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக் கொண்டு நீ மோசம் போய்விடாதே. அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக் கொண்டு மாய்ந்து போய்விடாதே.

முக்கியமாக பாவி, பெண்களின் மேல் பாகங்களைப் பார்த்து மயங்கி விழுந்து விடாதே. பின்னர் அதிலிருந்து நீ எழுந்திருக்கவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள். உலகில் யாவும் பொய். பொண்ணு பொய். அவளது மெய் (உடம்பு) யும் பொய்.- என எச்சரிக்கை விடுக்கிறார் அன்றே ஆதிசங்கரர்!

இன்று நாம் சகஜமாக செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது, சந்யாசிகள் முதல் கொண்டு சினிமாப்பட ரசிகர்கள் வரைக்கும் சங்கரரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தை தழுவிக் கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அதற்காக... தான் சந்யாசியான க்ஷணத்திலேயே தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். வேதம் பொய். அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தான் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிகை (குடுமி) யக்ஞோபிதம் (பூணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம் என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்...

சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.

சங்கரரின் இந்த செய்கைகள் ஏற்படுத்திய கோபத்தின் மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின - . அவரது உபதேசங்கள்.இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதை போல... குழந்தாய்.. இந்தா பால், இதைக் குடித்து வளமோடு வாழு என்கிறது வேதம்.

உனக்கென உன்னை நம்பும் பெண்ணோடு இணைந்து வாழ்க்கையைச் சுகமாக நடத்துவாயாக. இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி வருபவர்களைச் சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது. அவர்களை விரட்டியடியுங்கள் என சொல்கிறது வேதசாரம்.

இன்னும் உபநிஷது சொல்வது என்னவென்றால் ஜானாதீ இச்சதீ யததே...? அதாவது நாம் பார்ப்பதன் மேல் அறிவானது ஆசை கொள்ளும். ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம் செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை. ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது.

ஆனால் சங்கரரின் அத்வைதம்... இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர் மீது சரமாரியாக கருத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறு பிளவு ஏற்பட்டது.

உலகமே மாயம் என்று மாயாவாதத்தை ஒரு பிரிவினரும், மாயம் அல்ல, அது நம் அக்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முளைத்தனர்.சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை “Educated Class” அளவிலேயே கூறி வந்ததால், இந்த பிளவும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

No comments:

Post a Comment